வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
அடையாள அட்டை!
18 வயது பூர்த்தி அடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்கு அளிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியம். ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. அதைவிட முக்கியம், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். சில காரணங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடியின் காரணமாக வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் போகலாம். அப்படி இருப்பின் நீங்கள் வாக்களிக்க முடியாது. அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது, ஆனால் வாக்காளர் அட்டை உங்களிடம் இல்லை என்றால், உங்களால் வேறு ஆதாரங்களைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும். இடம் பெயர்ந்து இன்னொரு தொகுதிக்குப் போய், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் பழைய வாக்காளர் அட்டையை ஆவணமாகக் காட்டலாம்.
வாக்காளர் சீட்டு!
'எங்கே வாக்களிப்பது?’ என்ற விவரத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே வீடு தேடி வந்து தேர்தல் பணியாளர்கள் தருவார்கள். இந்த வாக்காளர் சீட்டில் உங்களின் பெயர், புகைப்படம், வாக்குச்சாவடியின் முகவரி... போன்ற விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டை அரசியல் கட்சியினரும் தருவார்கள். வாக்காளர் அடையாள அட்டையோ அல்லது வாக்காளர் சீட்டோ அல்லது அரசியல் கட்சிகள் தரும் 'டோர் ஸ்லிப்’போ... ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். இந்த மூன்றும் உங்களிடம் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் நிச்சயம் வாக்களிக்க முடியும். உங்கள் புகைப்படத்துடன் கூடிய அரசு ஆவணங்களான பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்க முடியும்.
தேர்தல் அலுவலர்களால் விநியோகிக்கப்படாத வாக்காளர் சீட்டுகள், தேர்தல் தினத்தில் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சீட்டுகளை வழங்குவதற்காக வாக்குச்சாவடியிலேயே உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் அங்கே சென்று பெற்றுக்கொள்ளலாம். தவிர, நமக்கு ஏற்படுகிற சந்தேகங்களையும் அங்கே நிவர்த்தி செய்வார்கள்.
எங்கே வாக்குச்சாவடி?
மக்கள் அதிக தூரம் அலைய அவசியம் இல்லாமல், முடிந்தவரை அருகில் உள்ள இடங்களில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள்தான் வாக்களிப்பார்கள் என்பதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஇருக்காது. கடந்த தேர்தலைவிட இப்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது என்பதை எஸ்.எம்.எஸ். மூலமும் தேடலாம். epic என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, சிறு இடைவெளிவிட்டு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவுசெய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உங்கள் வாக்குச்சாவடி குறித்த விவரம் பதிலாக வந்து விழும். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்களிக்கலாம்.
மின்னணு இயந்திரம்!
கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஐந்து மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட், தேர்தல் அதிகாரி முன்பு இருக்கும். பேலட் யூனிட் வாக்காளர்கள் வாக்களிப்ப தற்கான மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட் பகுதியில் இருக்கும் பட்டனை தேர்தல் அலுவலர் அழுத்திய பிறகுதான் பேலட் யூனிட்டில் உங்கள் வாக்கைப் பதிவுசெய்ய முடியும்.
வாக்குச்சாவடி நடைமுறைகள்!
வாக்குச்சாவடிக்குள் நீங்கள் நுழைந்ததும் முதலில் அலுவலரிடம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையையோ, வாக்காளர் சீட்டையோ அல்லது பூத் சிலிப்பையோ காண்பிக்க வேண்டும். இவை இல்லாதபட்சத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்த ஆவணங்களில் ஒன்றைக் காட்டலாம். அந்த அலுவலர் தன்னிடம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்ப்பார். பெயரையும் பதிவு எண்ணையும் உரக்கப் படித்துவிட்டு, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மீது ஒரு கோடு போடுவார். உங்கள் பெயரைச் சொல்லும்போது அங்கே அமர்ந்திருக்கும் கட்சிகளின் ஏஜென்ட்கள், தங்கள் வசம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் அதைச் சரிபார்த்துக்கொள்வார்கள்.
இந்தச் சரிபார்த்தல் முடிந்த பிறகுதான் நீங்கள் இரண்டாவது அலுவலரிடம் செல்ல முடியும். இரண்டாவது அலுவலர் உங்கள் இடது கை ஆள்காட்டி விரலின் மீது மையை அடையாளமாக இடுவார். அதோடு அவரிடம் இருக்கும் படிவத்தில் உங்கள் வாக்கு எண்ணை எழுதி அதில் உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொள்வார். கையெழுத்து போட முடியாதவர்களிடம் இடது கை கட்டைவிரல் ரேகையைப் பதிவு செய்வார். உங்களிடம் சீட்டு ஒன்றை வழங்குவார். அதை எடுத்துக்கொண்டு மூன்றாவது அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அதைப் பெற்றுக்கொண்டு தன் முன்பு இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'பேலட்’ என ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பட்டனை அழுத்துவார். அதன் பிறகு நீங்கள் ஓட்டு போடும் மறைவிடத்துக்குச் செல்லவேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட்டில் வரிசையாக வேட்பாளரின் பெயர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் சின்னத்துக்கு எதிராக உள்ள நீல நிற பட்டனை அழுத்தவேண்டும். உடனே அந்த வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள சிவப்பு நிற விளக்கு எரியும். அதோடு 'பீப்’ என்ற ஒலியும் கேட்கும். அதுதான் உங்கள் வாக்கு பதிவானதற்கான அறிகுறி. ஒலி எழுப்பிய உடனேயே மூன்றாவது தேர்தல் அலுவலரின் முன்பு இருக்கும் கட்டுப்பாட்டு கருவியில் எரிந்துகொண்டிருக்கும் 'பிஸி’ விளக்கு அணைந்துவிடும்.
பார்வைத்திறனற்ற வாக்காளர்கள், துணைக்கு ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்லலாம். மற்ற யாரும் வாக்களிக்கும் இடத்துக்கு கூடுதல் நபர்களை அழைத்துச் செல்ல முடியாது. அதேபோல வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது.
உங்கள் வாக்குகளை இன்னொருவர் போட்டுவிட்டால்..?
காலையிலேயே சென்று வாக்களித்துவிடுவது நல்லது. பிற்பகலில் சென்றால், உங்கள் வாக்கை வேறு யாராவது பதிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை அப்படி உங்கள் வாக்கை வேறு யாரோ போட்டுவிட்டாலும், ஒரு வாக்காளராக உங்களது உரிமையை நிலைநாட்ட முடியும். 'நான் இந்த வாக்குச்சாவடியின் வாக்காளர்தான்’ என்பதற்கான ஆவணத்தை வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் காட்ட வேண்டும். அந்த அதிகாரி உங்களிடம் கேள்விகள் கேட்டு சான்றுகளைச் சரிபார்ப்பார். ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவர் கருதினால், உங்களுக்கு 'ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு’ தருவார். அது அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டு. அதில் பழைய முறைப்படி முத்திரை குத்தி வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களித்த வாக்கு சீட்டை மடித்து ஓர் உறையில் போட்டு தேர்தல் அதிகாரி சீல் வைத்துவிடுவார். வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு வித்தியாசம் நூலிழையில் இருந்தால், இந்த ஆய்வுக்குரிய வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’!
'எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை’ என்பதைத் தெரிவிக்கும் வசதி, இதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இல்லை. 49(O) என்ற பிரிவின் கீழ் அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும். இது ரகசியமானது இல்லை என்பதால் கணிசமானோர் இந்தப் பிரிவின் கீழ் வாக்களிக்கத் தயாராக இருந்தும், இதைப் பயன்படுத்த அஞ்சினார்கள். இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டு விட்டது. இப்போது இதன் பெயர் நோட்டா (NOTA - None Of The Above). வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இந்த 'நோட்டா’ பட்டன் இருக்கும். NOTA என்று ஆங்கிலத்திலும், 'மேற்காணும் நபர்களில் எவரும் இல்லை’ என்று தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்.
உறுதிச் சீட்டு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அச்சிடும் கருவி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். வாக்களித்து முடித்த உடனேயே அதில் இருந்து ஒரு சிறிய துண்டுச்சீட்டு வெளியில் வரும். அதில் வரிசை எண், நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவை இருக்கும். அதுதான் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதற்கான ஆதாரம். அதன் பிறகு அந்த ரசீது இயந்திரத்துக்குள் மறுபடியும் சென்றுவிடும். ஆனால், இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மத்திய சென்னை தொகுதியில் மட்டுமே இந்தத் தேர்தலில் அறிமுகம் ஆகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் உங்கள் விரல் முனையில்! சுமார் 120 கோடிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் பிரமாண்டமான ஜனநாயக நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆளுமைகளை நாம் தேர்வு செய்கிறோம். அந்தப் பணியின் நேர்மை கருதி வாக்களிக்கும் முன்பு நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஏனெனில், இந்தியா நடைபோட வேண்டிய திசையை நம் விரல்கள்தான் தீர்மானிக்கும்!
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)