April 13, 2014

கருஞ்சீரகம் – அருமருந்து


கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)

பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.
மேற்கண்ட நபிமொழிக்கு விரிவுரையாகிய ஃபத்ஹுல்பாரி, உம்தத்துல் காரீ, அல்மின்ஹாஜ் ஆகிய நூல்களில் கருஞ்சீரத்தின் சிறப்பைக் குறித்த விபரங்களை அனுபவித்தே எழுதியுள்ளனர். கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை எல்லாக் காலங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு:- 
கருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத்
தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. 

ஹிந்தி மொழியில் இதற்கு கொலொஞி எனப் பெயர்.  இந்தியாவில் பஞ்சாப், பீகார், அஸ்ஸாம் மாநிலங்களில் காட்டுச் செடியாக வளர்கிறது.

கருஞ்சீரகத்தின் பலன்கள் வருமாறு:-
தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.
  • சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
  • கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.
  • கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
  • கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.
  • கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.
  • கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.
  • கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.
  • கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.
  • கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
  • கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.
  • குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
  • கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
  • கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
  • கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
  • தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
  • 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
  • கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vinegar) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
  • காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
  • கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
  • நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Pages 9123456 »

Comments

 
வருகைத்தந்தவர்கள்