January 8, 2013

புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா

அல்லாஹ் இவ்விறை இல்லத்தை கட்டப் பணித்த போது கிஸ்வாவைப்பற்றி ஏதும் குறிபபிடவில்லை எனினும் பண்டை காலம் தொட்டே கிஸ்வா போர்த்துவதை ஒரு வைபவமாகப் பல அரசர்களும் நடத்தி வந்ததாக வரலாற்றிலே காண முடிகிறது. கிஸ்வாவைப்பற்றி சில தகவல்களை தொகுத்துத் தருகிறார். கடடுரை ஆசிரியர் டாக்டர் பாக்கவி அவர்கள்.

முதல் கிஸ்வா

1. கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத்தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்குள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.

2. பெருமானார் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.

3. கலீபா உமர்(ரலி) அவர்கள் கி.பி 634-ல் (ஹிஜ்ரி 13) எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினாhகள்.

4. கலீபா உத்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 27-லும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் இருமுறை கிஸ்வா அணிவிக்கப்பட்டது.

5. கலீபா முஆவியா(ரலி) யின் காலத்தில் முஹர்ரம் 10-ம் நாள் அன்று பட்டுத்துணியாலும் ரமலான் கடைசியில் கபாத்தி என்ற கட்டித் துணியாலும் போர்த்தினார்கள்.

இவர் காலத்தில் தான் ”லாயிலாஹ இல்லல்லாஹ்” ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை’ என்ற அரபி வாக்கியம் பொறித்த கிஸ்வாக்கள் பயன்படுத்தப்பட்டன.

6. காலப் போக்கில் ஒரு முறை அணிவித்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் கிஸ்வாவை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது பெருத்த பளு சேரவே ஹிஜ்ரி 160-ல் (கி.பி.775) கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றிவிடப் பணித்தார்.

சிகப்பு, பச்சை,வெள்ளை கிஸ்வாக்கள்.  சிகப்பு, பச்சை, வெள்ளை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலங்களில் கிஸ்வாக்கள் போர்த்தப்பட்டு வந்தன்.

கறுப்பு நிற கிஸ்வா

7. கறுப்பு நிற கிஸ்வா கலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் தான் (ஹிஜ்ரி 575 – கி.பி.1179) முதன் முதலில் கறுப்புநிறம் பயன்படுத்தப்பட்டது. அதுவே இன்று வரை தொடர்கிறது.

8. கி.பி.1342 – ஹிஜ்ரி 743 ல் எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டு மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

சுல்தான் கலாவூன் ஆட்சிக்கு 300 ஆண்டுகட்கு பிறகு வந்த உத்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார். கஃபாவுடன் மதீனா ரௌலா ஷரீபும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது.

9. பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்திலிருந்து மக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இவைகளை கொண்டுவர 15-க்கு மேற்பட்ட ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. ‘மஹ்மல்’ என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர்.

இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூணும், அது மக்கா வந்தடைந்ததும் இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் அந்த ஒட்டகங்களை வரவேற்பர்.

10. ஹிஜ்ரி 843 – (கி.பி 1924) ல் மன்னர் அப்துல் அஸீஸ் இப்ன் ஸவூது இப்படி ஆடிப்பாடி கிஸ்வாவை கொண்டுவரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணாகயிருப்பதைக் கண்டித்ததால் மீனாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கிஸ்வாவை எகிப்து அனுப்புவதை நிறுத்திக் கொண்டது.

சவூதியில் கிஸ்வா தயாரிப்பு

11. அவ்வாண்டே மன்னர் அப்துல் அஸீஸ் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த தொழிலாளிகளை கொண்டு வந்து கிஸ்வா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார்.

12. 1927 –ல் (ஹிஜ்ரி 1346) இறுதியில் சவூதி தொழிற்சாலையில் தயாரிக்கப்;பட்ட கிஸ்வா போர்த்தப்பட்டது. இது பத்து ஆண்டுகள் தொடர்ந்தது.

13. 1950-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பின்பு எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமையப் பெற்றது. இது 1962 வரை தொடாந்தது.

14. அதன் பின்னர் மன்னர் ஸவூது பின் அப்துல் அஸீஸ் ஆட்சியில் மீண்டும் கிஸ்வாவை மக்காவிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.

15. சுமார் 240 சவூதி கைவினைஞர்கள் பணிபுரியும் இந்த தொழிற்சாலை பிற பள்ளி வாசல்களில் விரிக்க பயன்படும் விரிப்புகளையும் தயாரித்து வருகிறது.

16. கிஸ்வாவை தயாரிக்க 670 கிலோ தூய வெள்ளைப்பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்நூலுக்குப் பின்னர் உயர்தர கறுப்புச் சாயம் பூசுகின்றனர்.

650 சதுர மீட்டர்

17. ஒரு கிஸ்வா 47 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் 14 மீட்டர் நீளமும் 95 செ.மீ அகலமும் கொண்டது. அதன் மொத்த பரப்பு 650 சதுரமீட்டர்.

10 கோடி செலவில் கிஸவா (120 கிலோ தங்கமும் வெள்ளியும்)

18. 120 கிலோ தங்கமும் வெள்ளியும் (1க்கு 4 விகிதத்தில்) கலந்த இழைகளால் திருகுர்ஆன் வசனங்கள் மிக நுட்பமான முறையில் பின்னப் படுகின்றன. கிஸ்வா தயாரிக்க ஆகும் மொத்தச் செலவு 170 லட்சம் ரியால்கள் (சுமார் 10 கோடி ருபாய்)

தங்கத்தில் கதவு

19. கஃபாவின் கதவுகள் தரைமட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவை தங்கத்தினால் செய்யப்பட்டவை. இந்த வாயிற் பகுதியை மறைக்கும் திரை (7.5 ஒ 4 மீட்டர்) அளவுடையது. அதுவும் சிறந்த வேலைப்பாடுகளால் ஆனவை. கஃபாவின் உள்ளே செல்ல நகரும் ஏணிப்படிகளை பயன்படுத்துகின்றனர்.

20. கஃபாவின் உட்சுவர்களையும் அதன் கூரைப் பகுதிகளையும் பச்சை நிற பட்டுத் துணியால் அலங்கரிக்கின்றனர். அவைகளிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்படுகின்றன.

21. ஒவ்வொரு ஆண்டும் ஷாபான் மாத்திலும், துல்ஹஜ்ஜு மாதத்திலும் கஃபாவின் உட்தளம் சந்தனத்தாலும், உயர்ரக வாசனைத் திரவியங் களாலும் கழுகப்படும். உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியப் பிரதி நிதிகளும் தலைவர்களும் பங்கேற்று கழுக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

புதிய கிஸ்வாக்கள்

22. ஹஜ்ஜுக்கு முன்பாக கழுகும்போது புதிய கிஸ்வா அணிவிக்கப்படும்.

பழைய கிஸ்வா பல சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், தொல் பொருட்காட்சியங் களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது.

UNO வில் கிஸ்வாவின் ஒரு புகுதி

23. கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த (9 ஒ 2.5 மீட்டர்); அளவுடைய திரைச் சீலையை 1983-ம் ஆண்டு சவூதி மன்னர் ஃபஹ்து உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள உலக நாடுகள் மன்றத்து (UNO) வரவேற்பு அறையில் தொங்விட அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.

நன்றி :-   அல்பாக்கவி.காம் 


0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

வருகையாளர்கள்

 

Copyright 2010 - 2018 All Rights Reserved | உங்கள் ப்ளாக்

வருகைத்தந்தவர்கள்