தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு அறிவித்தது. சர்.சி.வி.ராமன் அவர்கள் ஒளிச்சிதறல் விதி அதாவது ராமன் விளைவு (Raman Effect) என்கிற ஆராய்ச்சி முடிவை 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று வெளியிட்டார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1987ஆம் ஆண்டு அன்றைய பிரதமரின் ஒப்புதலோடு, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சர். சி. வி ராமன் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
அறிவியலின் சிறப்பை இளம்தலைமுறை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்கவே இத்தினம் கடைப்பிடிப்பதன் நோக்கமாக உள்ளது.
சர். சி.வி. ராமனின் முழுப் பெயர் சந்திரசேகர வெங்கட்ராமன். திருச்சிக்கு அருகே உள்ள திருவானைக்காவலில் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே அறிவுக்கூர்மையுடன் இருந்தார் ராமன். அவருக்கு 11 வயது ஆனபோது பள்ளிப் படிப்பை முடித்தார். 15ஆவது வயதில் சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் மற்றும் பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்து மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். தொடர்ந்து அதே கல்லூரியில் 19 வயது முடியும் முன்பே முதுகலைப் பட்டத்தையும் முடித்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
இதன் பிறகு கொல்கத்தாவில் உதவி அக்கவுன்டன்ட் ஜெனரலாக ராமன் வேலைக்குச் சேர்ந்தார். 10 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த ராமனுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக வேலை கிடைத்தது. அப்போது ஓய்வு நேரங்களில் அறிவியல் வளர்ச்சிக்காகப் பரிசோதனைக் கூடங்களில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவந்தார். ஒளிச்சிதறல் மற்றும் ஒலியியல் பற்றிய முக்கியமான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன.
அதன் தொடர்ச்சியாக 1924ஆம் ஆண்டு லண்டன் ராயல் அமைப்பின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது மட்டுமன்றி 1929ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு “நைட் ஹுட்” என்ற பட்டத்தை அளித்துக் கவுரவித்தது. 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது. இப்பட்டத்தைப் பெற்றதால்தான், அவர் சர் சி.வி.ராமன் என்று அழைக்கப்படுகிறார். 1930ஆம் ஆண்டு அவருக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது.
நாட்டின் அனைத்து பகுதியிலும் வாழும் ஆசிரியர், மாணவர்கள், மற்றும் பல சேவைத்துறையை சார்ந்தோறும் பல புதிய அறிவியல் சிந்தனைகளை கண்டறிவதும் அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுமே நாம் அறிவியல் அறிஞர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.
C.சுந்தரராஜ்,
மகளிர் மே.நி.பள்ளி,
குத்தாலம்.
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)