October 6, 2011

பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் - திரு.சுஜாதா ரங்கராஜன்


பத்திரிக்கையாளர், பன்னூலாசிரியர்,கணிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட,தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த சுஜாதா என்று அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த திரு.ரங்கராஜன் அவர்கள் எழுதிய ஓரிரு நாவல்களைப் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்துநடை, வியக்கவைக்கும் தகவல், முடிவில் பிரமிப்பு ஆகியவற்றால் தன் எழுத்துப் பணிகளில் தனக்கென தனிஇடத்தையும் தவிர்க்க முடியாத வாசகர் வட்டத்தையும் பெற்று சிறந்து விளங்கினார்.

குர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான் குர்ஆனின் கூப்பாடுகள் சிந்திப்பீராக/சிந்திக்க மாட்டீர்களா? என்று சிந்தனையாளர்களை நோக்கியே இருக்கின்றன. குர்ஆன்-003:058 என்ற திருக்குர்ஆன் வரிகளுக்கேற்ப சுஜாதாவும் திருக்குர்ஆனின் நறுமணத்தை நுகர்ந்தவர்களில் ஒருவர் என்ற தகவல் பலருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.


பொதுவாக அறிவுஜீவிகளாக இருப்பவர்கள் திறந்த மனதுடனே எதையும் அணுகுவார்கள். தமிழ்கூறும் நல்லுலகில் அறிவு ஜீவிகளில் ஒருவராக அறியப்பட்ட எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் திருக்குர்ஆன் பற்றியும் அது மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது (வஹி) குறித்து "வஹி எனும் வேத வெளிப்பாட்டைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது, குர்ஆன் வசனங்களும் அதன் வெளிப்பாடும் தனிமனித சாத்தியமற்றவை" என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் எளிதில் உணர முடியும்" என்று குர்ஆன் வெளிப்பாட்டிற்கு சுஜாதாவும் நிகழ்காலச் சான்று பகர்ந்ததாக நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சுஜாதா ரங்கராஜன் அவர்கள் தினமணி (2003) ரம்ஜான் மலருக்காக குர்ஆன் குறித்து எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். திரு.சுஜாதாவின் நேர்மையான மற்றும் வெளிப்படையான இந்தக் கட்டுரை அவர்மீதான நன்மதிப்பைக் கூட்டுகிறது. அண்ணாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியை தரட்டுமென்று கூறி நன்றியுடன் மீள்பதிவு செய்கிறேன்.

           -----------
சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் - 2003)-----------

"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.

நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.

'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.

அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.

எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.

இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.

காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.

'சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!'

'திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்' என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."

நன்றி:திரு.ரவிபிரகாஷ்

2 கருத்துரைகள்:

NIZAMUDEEN said...

நல்லதொரு பதிவு.

Abu Nadeem said...

@ Mr. Nizamudeen நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்!!!

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

வருகையாளர்கள்

 

Copyright 2010 - 2019 All Rights Reserved | உங்கள் ப்ளாக்

வருகைத்தந்தவர்கள்