அறிவியலில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் இறந்தகாலத்தில் நடந்தன, நிகழ்காலத்தில் நடக்கின்றன, மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகின்றன. அது ஒரு நாளும் நின்று விடப் போவது இல்லை. இதில் என்ன விசேஷம் என்றால்,
இறந்தகாலங்களில் எவ்வளவோ திட்டமிடப்படாத கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தான். என்ன புரியவில்லையா? ஒரு விஷயத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக வேறு ஏதோ ஒரு விஷயத்தைக்
கண்டுபிடித்துள்ளார்கள். இப்படித் தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்ட 5 மிகப் பிரபலமான கண்டுபிடிப்புகளைப் பற்றி சொல்லவா?
1) 1907ம் ஆண்டில் Leo Baekeland என்பவர் அரக்கு (Shellac) எனப்படும் ஒருவகை இயற்கைப் பிசினுக்குப் பதிலாக செயற்கை பிசின் உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் அந்நேரம் கண்டுபிடித்தது செயற்கைப் பிசின் இல்லை. தற்செயலாக நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கை உருவாக்கி விட்டார். இவரின் இந்த மாபெரும் கண்டுபிடிப்பினால் இன்று எங்குப் பார்த்தாலும் பிளாஸ்டிக் காணமுடிகிறது.

2) 1878ம் ஆண்டில் Constantin Fahlberg எனப்படும் ரசவாதி (chemist) அவரது ஆராய்ச்சிகள் முடிந்தவுடன் தனது கைகளைச் சுத்தம் செய்ய மறந்துவிட்டார். வீடு சென்றதும் தற்செயலாக அவரின் கைகளைச் சுவைத்துப் பார்த்த இவர், அவை இனிப்பாக இருந்தன என்பதை அவதானித்தார். அது தான் முதல் முறையாக இன்று பெரும்பாலும் நீரிழிவு நோயாளர்களால் உபயோகிக்கப்படும் சாக்கரின் (saccharin) எனப்படும் செயற்கை இனிப்பூட்டி உருவான நேரம் ஆகும்.

3) 1945ம் ஆண்டில் ரேடார் (Radar) ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள Percy Spencer எனப்படும் பொறியியலாளர் அவரது ரேடார் ஆராய்ச்சி நேரத்தில் காற்சட்டைப் பாக்கெட்டில் இருந்த சாக்லெட் உருகுவதை அவதானித்தார். அத்துடன் பிறந்தது தான் இன்று ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் நுண்ணலை அடுப்பு (micro wave oven).

4) இந்த நான்காவது கண்டுபிடிப்புக்கு யார் சொந்தக்காரர் என்பது இன்று வரைத் தெளிவாகக் கூறமுடியவில்லை, ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு தற்செயலானது என்பதில் ஒரு மாற்றுக் கருத்துமே இல்லை. 1772ம் ஆண்டுக்குப் பின் நைட்ரஸ் ஆக்சைடு (Nitrous oxide) எனப்படும் வாயு பல வருடங்களாகச் சிரிப்பூட்டும் வாயு (laughing gas) ஆக உபயோகிக்கப் பட்டது. இந்த வாயு அளவுக்கு மீறிச் சுவாசித்தால் உடனடியாக மயங்கி விடுவார்கள் என்பதை அறிந்தவர்கள்,
அதனை அந்நேரம் எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதைத் தெரியாமல் இருந்து விட்டார்கள். 1844ம் ஆண்டில் தான் Horace Wells என்னும் பல் வைத்தியர் தற்செயலாக இந்த வாயு மயக்க மருந்தாக உபயோகிக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தார்.
ஒரு கொண்டாட்டத்தில் சிரிப்பூட்டுவதற்காக அளவுக்கு மீறி சுவாசித்த நண்பர் ஒருவர் தவறி கீழே விழுந்து, உடலில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டும் ஒரு வலியும் இல்லாமல் இருந்ததை அவதானித்த இவர், அந்தச் சம்பவத்துடன் இன்றைய மயக்க மருந்தின் அடிப்படையைக் கண்டு பிடித்துவிட்டார்.

5) மருத்துவ உலகில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்று கூட தற்செயலாகத் தான் நிகழ்ந்தது. 1928ம் ஆண்டில் Alexander Fleming என்பவர் இன்ஃபுளுவென்சா (Influenza) என்னும் வைரஸ்களுடன் (Virus) ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தார். விடுமுறைக்குச் சென்று திரும்பிய இவர், அவரது ஆய்வுக்கூடத்தில் தவறுதலாக ஸ்டாபிலோகோகஸ் (Staphylococcus) என்னும் கிருமிகள் வைத்து இருந்த ஒரு தட்டு மூடப்படவில்லை என்பதை அவதானித்தார்.
பதறி ஓடி வந்து அதை நீக்க முயன்ற இவர், அந்தத் தட்டில் பூஞ்சை (அல்லது பூஞ்சணம்) பிடித்து இருந்ததைக் கவனித்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த ஆபத்தான கிருமிகள் தட்டில் பூஞ்சை பிடித்த இடத்தைத் தவிர மீதி இருந்த எல்லா இடங்களிலும் பரவி இருந்தன. எனவே, இந்தப் பூஞ்சை உள்ள இடத்தை அந்தக் கிருமிகள் தவிர்க்கின்றன என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்த இவர், பெனிசிலின் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotic) உருவாக்குவதற்கு அடிப்படியாக இருந்தார். இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி இன்று நம்மைப் பல்வேறு நோய்களில் இருந்து குணப்படுத்துகிறது.

உண்மை சொல்லப்போனால் இன்னும் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் தற்செயலாக நிகழ்ந்து இருக்கின்றன. ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது, வேறு ஏதோவொன்றைக் கண்டுபிடித்து இன்று மனித வாழ்க்கையே மாற்றி அமைத்துள்ளனர்.
நண்பர்களே, அடுத்த முறை சமைக்கும் போது அல்லது குளிக்கும் போது ஏதாவது வித்தியாசமாக இருந்தால் அது என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். தற்செயலாக இந்த உலகையே மாற்றி அமைக்கக்கூடிய மருந்து மாத்திரை அல்லது வேறு சுவாரசியமான விஷயங்களைக் கண்டுபிடித்து விடுவீர்கள்.
என்ன நான் சொல்வது சரி தானே? சரி இனி நீங்கள் கூறுங்கள், உங்களுக்கும் இது போல் தற்செயலாகக் கண்டுபிடித்த ஏதும் கண்டுபிடிப்புகளைப் பற்றித் தெரியுமா? இதற்குரிய பதிலையும்,
எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக Comment மூலம் அறியத் தாருங்கள்!
நன்றி : SciNirosh (Dr. Niroshan Thillainathan)
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)