January 15, 2018

மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

நல்ல மனைவி:

நபி (ஸல்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள் ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கவா ? (அதுதான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன் ) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள். நூல் அபூதாவூத் ( 1417 )

கணவனின் கைகளில்தான் மனைவியின் சொர்க்கம் இருக்கிறது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்ணே நீ உன்னுடைய கணவனுக்குச் செய்யும் கடமைகளில் ) என்னிலையில் இருக்கின்றாய் என்பதைக் கவனித்துக் கொள். நிச்சயமாக அவர் ஒன்று உன்னுடைய சொர்க்கமாக இருப்பார். அல்லது நரகமாக  இருப்பார். 
நூல் : அஹ்மத் (18233)

அதாவது கணவனுடைய கடமைகளை முறையாக நிறைவேற்றுகின்ற பெண் அதன் காரணமாக சுவர்க்கம் செல்வாள். முறையாக நிறைவேற்றாத பெண் அதன் காரணமாக நரகம் புகுவாள்.

கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  நான் ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிடுபவனாக இருந்தால் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன். (ஏனென்றால் அந்த அளவிற்கு அவள் தன்னுடைய கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. ஆனால் அல்லாஹ்வுக்கே தவிர யாரும் யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது)  
நூல் : திர்மிதி (1079)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒரு பெண் மனிதர்களில் யாருக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறாள் ? எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் அவளுடைய கணவனுக்கு என்று கூறினார்கள்   
நூல் : ஹாகிம் (7244)

மனைவியே கணவனுடைய வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். 
நூல் : புகாரி( 2554)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஒட்டகத்தில் பயணம் செய்யும் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்களாவர். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக்காப்பவர்கள் ஆவர்.  
நூல் : புகாரி (5365)

கணவனுடைய உபகாரங்களுக்கு நன்றி மறக்கக் கூடாது:

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் எனக்கு நரகம் காட்டப்பட்டது . அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள் உதவிகளை நிராகரிக்கிறார்கள் . அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து. பின்னர் (அவளுக்கு பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானாள் உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை. என்று பேசிவிடுவாள். என்றார்கள்  
நூல் : புகாரி  (29)

மலக்குமார்களின் சாபம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் தன்மனைவியைப் படுக்கைக்கு அழைத்து அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட அதன் விளைவாக அவர் இரவுப் பொழுதை கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை காலை விடியும் வரை வானவர்கள்  சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.  
நூல் : புகாரி (3237)

கணவன் மனைவிக்குள் செய்யவேண்டிய கடமைகள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச்செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும்.  
நூல் திர்மிதி (1083)

கணவனுடைய அனுமதியில்லாமல் செய்யக் கூடாதவை:

ஒரு பெண் தன்னுடைய கணவன் ஊரில் இருக்கும் போது அவரது அனுமதியில்லாமல் (சுன்னத்தான) நோன்பு நோற்பது கூடாது. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கக் கூடாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அவனது பொருளை தர்மமாக) செலவு செய்தால் (அதன் நன்மையில்) பாதி அவருக்கும் கிடைக்கும்.
நூல் : புகாரி (5195)

கணவனுடைய அனுமதியில்லாமல் அவசியமான நல்லகாரியங்களுக்கு தேவையான அளவு செலவுக்கு பணம் எடுத்துக் கொள்ளலாம்:

( ஒரு முறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ( என் கணவர் ) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என்குழந்தைக்கும் போதுமான பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவு எடுத்துக் கொள் என்று சொன்னார்கள்.  
நூல் : புகாரி (5364)

கணவன் மற்றொரு மனைவியை தலாக் விடுமாறு கூறுவது கூடாது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  ஒரு பெண் மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை) க் காலி செய்(துவிட்டு அதை தனதாக்கிக் கொள்) வதற்காக அவளை விவாகரத்துச் செய்துவிடுமாறு (தன் கணவணிடம் ) கோர அனுமதியில்லை. அவளுக்கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும்.  நூல் புகாரி (5152)

----------------------------------------------------------
இதையும் படிக்கலாமே!!!:  மனைவியை நேசியுங்கள் !

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்