1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.
(அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி) – ஆதாரம் : முஸ்லிம்)
2. குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்)
4. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.
(அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி)
5. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி )
6. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம் : முஸ்லிம்)
7. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே.
(அறிவிப்பாளர்: உமர்(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்)
8. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது.
(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) – ஆதாரம் : திர்மிதி)
9. எவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். "அலீஃப், லாம், மீம்" ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரலி) - ஆதாரம் : திர்மிதி, தாரமி.)
10. குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் பெருமானார்(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத மூஃமீனின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபு மூஸா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
11. யார் குர்ஆனை ராகமாக (தஜ்வீத்துடன்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (அறிவிப்பாளர்: பசீர் பின் அப்துல் முன்திர்(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்)
12. குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
13. நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம், இப்னுமாஜா)
14. குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
15. மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) - ஆதாரம் : அபூதாவுத், திர்மிதி)
16. குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, இப்னு குஸைமா)
குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது
(அல்குர்ஆன் 36: 70)
குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.
குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் படி செயல்படுங்கள்.
நன்றி:- ஆலமுல் இஸ்லாம்
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)